தென்னிந்தியாவை பாஜக ஆளும் காலம் விரைவில் வரும் - வானதி சீனிவாசன் நம்பிக்கை!
திமுக எம்.பிக்கள் பொய் பேசக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
இதில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசன், மகாராஷ்டிராவில் ஏழைகள், பெண்கள்,விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியதால் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்ததாக தெரிவித்தார்.
வயநாடு மக்கள் குடும்ப கட்சியான காங்கிரஸுக்கு இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும் விமர்சித்தார். தேர்தல் நேரத்தில் திமுகவினர் பொய் கூறி வருவதாகவும், திமுக எம்.பிக்கள் பொய் பேசக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தென்னிந்தியாவை பாரதிய ஜனதா ஆளும் காலமும் விரைவில் வர இருப்பதாக வானதி அப்போது தெரிவித்தார்.