தைப்பூசத்திருவிழா - சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!
தைப்பூசத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர்.
Advertisement
பழனி பால தண்டாயுதபானி கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூசம் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள சாத்தான்குளம் ஸ்ரீ தண்டாயுதபாணி பழனி ஆண்டவர் திருக்கோவிலில் இருந்து பழனி மலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்து ஊர்வலமாக வந்து பழனிக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்துச் சென்றனர். இதனை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக விரதம் இருந்து பக்தர்கள் தினந்தோறும் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் ஆகியவற்றை நடத்தினர்.
தொடர்ந்து காவடி எடுத்துச் சென்ற பக்தர்களுக்கு பாத பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பழனி மலையில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.