தைப்பூசம் - திருச்செந்தூர் கோயிலில் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு 18 அடி உயரத்தில் பறந்தபடி பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 11ஆம் தேதி தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வதால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டுள்ளது.
அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு வேல் குத்தியும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் பக்தர் ஒருவர் 18 அடி உயரத்தில் பறந்தபடி பறவை காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் ஆடியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.