தொடர் விடுமுறை - ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், அரையாண்டு விடுமுறையையொட்டி ஏற்காட்டிற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏறி பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஏற்காட்டில் ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய போலீசார் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.