தொடர் விடுமுறை - சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
விடுமுறை தினத்தை ஒட்டி சுற்றுலா தலங்களில் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.
Advertisement
உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும், குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் விடுமுறை நாளையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. முக்கிய சுற்றுலா தலங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, குகை கோயில் ஆகிய பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள், இதமான கால சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.
ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் வாகனங்களுக்குள்ளேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.