தொழில் முதலீட்டில் பின்தங்கும் தமிழகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
தொழில்துறை முதலீட்டில் தமிழகம் தொடர்ந்து பின்தங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவையில் செயல்பட்ட ஐடி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஐடி ஊழியர்களுக்கு சம்பளமும், அசல் ஆவணங்களும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, தமிழக தொழில்துறை அமைச்சர், முதலீட்டாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் 2 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கோவையிலிருந்து பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, 2022-ம் ஆண்டு துபாயில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட ரூ.6 ஆயிரம் கோடி என்ன ஆனது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்திற்கு முதலீடு கிடைக்காததில் ஆச்சரியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.