நடிகை பாலியல் புகார் : நகைக்கடை அதிபர் கைது - சிறப்பு தொகுப்பு!
பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில், வயநாட்டில் தனக்குச் சொந்தமான ரிசார்ட்டில் இருந்த தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்புப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அது பற்றிய செய்தி தொகுப்பு.
மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹனி ரோஸ். கடந்த 2005ஆம் ஆண்டில் வெளியான ‘பாய் பிரண்ட்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹனி ரோஸ் முன்னணி நடிகையானார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் நடிகை ஹனி ரோஸ், முதல் கனவே, காந்தர்வன், ஜீவாவின் 'சிங்கம் புலி', மல்லுக்கட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இயக்குனர் சுந்தர் C க்கு ஜோடியாக 'பட்டாம்பூச்சி' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் பாலகிருஷ்ணாவின் 'வீரசிம்மா ரெட்டி' படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றுக்குச் சிறப்பு விருந்தினராக தன்னை பிரபல தொழிலதிபர் ஒருவர் அழைத்ததாக கூறிய ஹனி ரோஸ், தான் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதனால்,அந்த தொழிலதிபர் தொடர்ந்து தம் மீது இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளால் சமூக வலைத் தளங்களில் எழுதி வருவதாகவும், இது குறித்து யாரும் அந்த தொழில் அதிபரிடம் கேட்கவில்லை என்றும் தனது முகநூல் பக்கத்தில் நடிகை ஹனி ரோஸ் பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து, தமது பதிவுக்குப் பதிலாக, முகநூலில் பலர் ஆபாசமாக கருத்துகளைத் தெரிவித்ததாக கூறி, தெரிவித்திருந்தார்.
மேலும், கேரளத் தொழிலதிபர் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை தொடுப்பதாகவும், தனது உடல் அமைப்பைக் குறிப்பிட்டு ஆபாசமாக பதிவிட்டதாகவும் ஹனி ரோஸ் கூறியிருந்தார்.
பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, கொச்சி நடிகர்கள் சங்கம் மற்றும் எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்திலும் நடிகை ஹனி ரோஸ் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பாபி செம்மனூர் உட்பட 27 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தப் புகாரை விசாரிக்க, கொச்சி சென்ட்ரல் ஸ்டேஷன் காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தப் புகாரில், முதலாவதாக கும்மளம் பகுதியை சேர்ந்த ஷாஜி கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, நடிகை ஹன்சிகாவுடன் தனது புதிய நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வற்காக கோயம்புத்தூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், 'போச்சே' என்று அழைக்கப்படும் பாபி செம்மனூர், வயநாட்டில் அவரது சொந்த ரிசார்ட்டில் வைத்து கைது செய்யப் பட்டார்.
ஏற்கெனவே, கடந்த புதன்கிழமை, நடிகையைப் பற்றிய தனது முந்தைய கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் பாபி செம்மனூர் வருத்தம் தெரிவித்திருந்த நிலையிலும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள டிஜிபியிடமும் நடிகை ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். இதன் பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபல தொழில் அதிபரும், முன்னணி தங்க நகை வியாபாரியுமான பாபி செம்மனூர், செம்மனூர் குழுமத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் பாபி செம்மனூரின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.