நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்! : எல். முருகன் பொங்கல் வாழ்த்து!
“தைத் திங்கள் பிறக்கட்டும், நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்” என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சார அடையாளமாக திகழும் பொங்கலை கொண்டாடும் உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”-- என்றான் வள்ளுவன்.
பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.
விவசாயம் செய்து வாழும் நம் மக்கள் பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழாவாகவும் பொங்கல் திகழ்கிறது.
போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என நான்கு நாட்கள் பொங்கல் திருநாளை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இயற்கையை போற்றி வணங்கும் நமது பாரத நாட்டின் கலாச்சார பெருமைமிகு பண்டிகையான பொங்கல் தினத்தை, வழக்கம்போல் இந்த ஆண்டும் நாம் அனைவரும் உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது நம்பிக்கை. கல்வி, தொழில், வணிகம் என அனைத்து துறைகளிலும் புதிய வழிகளை தைத் திருநாள் நமக்கு உருவாக்கித் தரும் என நம்புகிறேன். இந்த தைத் திங்கள் நாளில் நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் செழிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்து மூன்றரை ஆண்டுகளாக போலி திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், ஏழை எளிய மக்கள் என ஒவ்வொருவரும் அனுபவிக்கும் துயரங்கள் ஏராளம்.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாட ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசு பணத்தை கூட இந்த ஆண்டு திமுக அரசு வழங்க மறுத்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பணமின்றி தவிக்கும் மக்கள் ரேஷன் கடைக்கு சென்று வாடிய முகத்துடன் திரும்பி வரும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி நமது உள்ளத்தை உலுக்குகின்றன.
வெற்று விளம்பரங்களுக்கு பணத்தை வாரியிறைத்து வீண் செலவு செய்யும் திமுக அரசுக்கு ஏழை எளிய மக்களை பற்றி கவலை இல்லை. யாருக்கும் பயனற்ற ஒரு குடும்ப ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் திறமை, தொழில், பொருளாதாரம், மனித வளம் அனைத்தும் வீணாகி வருகிறது. ஒரு கட்சியை சேர்ந்த, ஒரு சிலர் மட்டும் பணம் குவிப்பதற்காக நடக்கும் இந்த ஆட்சி, அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படுவது உறுதி.
தமிழகத்தை சூழ்ந்துள்ள தீய அரசியல் சக்தியை வீழ்த்தி தேசியத்தின் பாதையில் தமிழக மக்கள் அணிவகுத்து நிற்பார்கள்.
விரைவில் நல்லதொரு விடிவு காலம் பிறந்து தமிழகம் இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க பொங்கல் திருநாள் நமக்கு உத்வேகத்தை அளிக்கட்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்.
தைப்பொங்கல் திருநாள் எல்லா நன்மைகளையும் மக்களுக்கு வழங்கட்டும் என வேண்டி மக்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.