நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் : நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!
நடிகர் தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இதில் நானும் ரவுடி தான் திரைப்படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், தனுஷ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது.
இந்நிலையில் வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. இதனால் 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணையை, நயன்தாரா எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.