செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நவீன கால சித்தார்த்தன் : துறவறம் பூண்ட மலேசிய கோடீஸ்வரரின் மகன் - சிறப்பு கட்டுரை!

08:00 PM Nov 28, 2024 IST | Murugesan M

மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணனின் ஒரே மகனான அஜான் சிரிபான்யோ, தனது தந்தையின் அபரிமிதமான செல்வத்தை பொருட்படுத்தாமல், அனைத்து சொத்துக்களையும்  விட்டுவிட்டு, புத்த துறவியாகி உள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

THE MONK WHO SOLD HIS FERRARI "தி மாங்க் ஹூ சோல்டு ஹிஸ் ஃபெராரி " என்ற நாவலைப் புகழ் பெற்ற எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதியிருந்தார். அந்த நாவலில், ஒரு வெற்றிகரமான வழக்கறிஞரான ஜூலியன் மேன்டில், தனது உல்லாச மாளிகையையும் ஃபெராரியையும் விற்று விட்டு, இமய மலையில் ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்வார்.

முற்றிலும் கற்பனையான இந்த நாவலை நிஜமாக்கி இருக்கிறார் அஜான் சிரிபான்யோ. நிஜ வாழ்க்கையில் பில்லியன் கணக்கான மதிப்புடைய தனது மொத்த செல்வத்தையும் துறந்துவிட்டு 18 வயதில் புத்த துறவி ஆகி இருக்கிறார்.

Advertisement

ஏகே என்றும் பரவலாக அறியப்படும் அனந்த கிருஷ்ணன், மலேசியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார். இந்த ஆண்டு ,ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, ஏகே சொத்து மதிப்பு 45,339 கோடி ரூபாய் ஆகும். தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள்கள், ஊடகங்கள், எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஏகேயின் வணிகப் பேரரசு பரவியுள்ளது.

கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தலைமையிலான புகழ்பெற்ற ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஸ்பான்சரான ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராகவும் ஏகே இருந்தார். விதிவிலக்கான தன் வணிக புத்திசாலித்தனத்தால் அனந்த கிருஷ்ணனின் செல்வாக்கு தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது.

தாய்லாந்து அரச குடும்பத்தின் வழித்தோன்றலான மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபனை திருமணம் செய்த ஏகேவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். புத்த மதத்தைப் பின்பற்றிவரும் ஏகேவின் ஒரே மகன் அஜான் சிரிபான்யோ ஒரு தேரவாத புத்த துறவி ஆகியுள்ளார்.

தனது இரண்டு சகோதரிகளுடன் லண்டனில் வளர்ந்து, இங்கிலாந்தில் தனது படிப்பை முடித்த அஜான் சிரிபான்யோ ஆங்கிலம், தமிழ் மற்றும் தாய் மொழி உட்பட எட்டு மொழிகளில் சரளமாகப் பேசும் திறமைகொண்டவர் என்று கூறப்படுகிறது.

தாய் வழி உறவுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அஜான் சிரிபான்யோ, சிறுவயது முதலே புத்த மத நம்பிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததாக தெரியவருகிறது. இதுவே அஜான் சிரிபான்யோவை நிரந்தர துறவு வாழ்ககைக்கு கொண்டு வந்திருக்கிறது.

அஜான் சிரிபான்யோ துறவி ஆவதற்கான காரணங்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, என்றாலும் 50,000 கோடிக்கும் மேலான வணிக பேரரசை விட்டு விட்டு எளிமையான துறவு வாழ்க்கையைத் தழுவியது ஆச்சரியமாக பார்க்கப் படுகிறது.

இப்போது,தாய்லாந்து-மியான்மர் எல்லையில் அமைந்துள்ள ( Dtao Dum )தாவோ டம் மடாலயத்தில் அஜான் சிரிபான்யோ துறவியாக இருக்கிறார். குடும்ப பாசம் என்பது புத்தமதத்தின் கட்டளைகளில் ஒன்றாகும். எனவே, அஜான் சிரிபான்யோ தனது தந்தையை அவ்வப்போது பார்க்க நேரம் ஒதுக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம் கொழித்து கிடக்கும் தனது சாம்ராஜ்ஜியத்தின் ஒரே ஆண் வாரிசு துறவறத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது, புத்தமத்தை பின்பற்றும் ஏகே.,வுக்கு விலைமதிப்பற்ற கடவுளின் பரிசாகும்.

Advertisement
Tags :
Buddhist monkFEATUREDMAINchennai super kingsAjahn SiripanyoMalaysia's third richest manAnanda Krishnan
Advertisement
Next Article