நாகையில் சுனாமி நினைவு ஸ்தூபியில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி பிரார்த்தனை!
நாகையில் சுனாமி நினைவு ஸ்தூபியில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது நாகை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது நினைவாக அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
வரும் 26 ஆம் தேதி 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு அனுசரிக்கப்படும் நிலையில், கீச்சாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மலர்தூவியும், தீபம் ஏற்றியும் பிரார்த்தனை செய்தார். இதனை தொடர்ந்து சுனாமியின்போது பெற்றோர்களை இழந்து அரசு காப்பகங்களில் தங்கி பயிலும் குழந்தைகளை சந்தித்து பேசினார்.
மேலும், காப்பகத்தில் தங்கி பயின்று தற்போது திருமணம் ஆகி குழந்தைகள் ஈன்றெடுத்த பெண்களை நலம் விசாரித்த அவர், குழந்தைகளை கைகளில் தூக்கி வாஞ்சையாக கொஞ்சினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வந்து நல்ல நிலையில் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
சுனாமியின்போது தம்மை அப்பா என அழைத்தவர்கள் தற்போது பெரியவர்களாக வளர்ந்து திருமணம் ஆகி பிள்ளைகளை ஈன்றெடுத்துள்ளதாகவும், அவர்கள் தம்மை தாத்தா என்ற ஸ்தானத்திற்கு ப்ரோமோஷன் கொடுத்துள்ளதாகவும் நகைப்புடன் கூறினார்.