நாம் தமிழர், விசிக மாநில கட்சியாக அங்கீகாரம் - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் 3-ம் இடத்தை பிடித்தது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் 4-ம் இடத்தை பிடித்தது. கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இம்முறை சின்னத்தில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளை பெற்றது.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் 8 சதவீதத்துகும் அதிகமான வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. ஆனால், உழவு செய்யும் விவசாயி ஏற்கனவே உள்ள சின்னத்துடன் ஒத்திருப்பதால் அதை வழங்க முடியாது என்றும், விலங்கு என்பதால் புலி சின்னத்தையும் வழங்க முடியாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாகவும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.