செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நீட் நாடகம் போதும் முதல்வரே...மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள் - அண்ணாமலை

08:05 PM Apr 09, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

நீட் நாடகம் போதும் என்றும்,மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள்  என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது திமுக என தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்  ஸ்டாலின் என அவர் கூறியுள்ளார்.

Advertisement

அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விகளை மீண்டும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின்  முன்வைக்க விரும்புகிறேன்.

நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக அரசுக்கு எண்ணம் இருக்குமேயானால், நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.

டாஸ்மாக் ஊழல் விசாரணைக்கு தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு குறித்து திமுக கூறுவது உண்மை நிலவரத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள்? நீட் தேர்வு வந்த பிறகே, மருத்துவக் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என்று பொய் சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில், நீட் தேர்வு இல்லாத, 2007 - 2016 காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 38 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர் என்ற உண்மையை மறைப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அறிவாலயத்தில் இருந்து தயார் செய்து கொடுத்த முன்னாள் நீதிபதி  ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பாக, கடந்த 2010 - 2014 ஆண்டுகளில், மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன என்பதை ஏன் குறிப்பிடவில்லை?

நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024 நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் 8 பேர், தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்கள். தமிழகத் தேர்ச்சி விகிதம், தேசிய சராசரியை விட அதிகம் என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா?

யாரை ஏமாற்ற இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்? ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தோடு, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பராமரிக்காமல், புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்ற நிலைக்குக் கொண்டு சென்றதோடு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குக் குறித்த காலத்தில் விண்ணப்பிக்காமல் அலட்சியமாக இருந்தது திமுக அரசு என்றும் அவர் சாடியுள்ளார்.

திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, தமிழக மாணவர்கள் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்கிறது திமுக என்பதை, முதலமைச்சரால் மறுக்க முடியுமா? என்றும் அவர் வினவியுள்ளார்.

நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி. போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Advertisement
Tags :
FEATUREDMAINannamalaiAll party meetingneet examtamilnadu bjp president
Advertisement