நீதித்துறை விவகாரங்கள் அரசியல் தலைவர்களுடன் விவாதிக்கப்படுவதில்லை - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டம்!
அரசியல் தலைவர்களுடன் நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் வீட்டில் கடந்த மாதம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதுபோன்ற சந்திப்புகளின்போது நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள், தலைமை நீதிபதிகளின் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில் கலந்துகொள்வது இயல்புதான் என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுபோன்ற சந்திப்புகளில் ஒருபோதும் நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படுவதில்லை எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், நீதித்துறை விவகாரங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.