நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
கோயில் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்றாவிட்டால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பாபராயன் பேட்டையில் உள்ள விஜய வரதராஜ பெருமாள் கோயிலில், வடகலை வைணவ சம்பிரதாயப்படி திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவு கடைபிடிக்கப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி செந்தில் குமார், ராமமூர்த்தி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஶ்ரீதர் காணொலி மூலம் ஆஜரானார்.
அப்போது, கோயில் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்றாவிட்டால், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரை நீக்கம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதே போல இணை ஆணையருக்கு எந்தவித பதவி உயர்வும் வழங்க கூடாது என உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர். விஜய வரதராஜ பெருமாள் கோயில் சீரமைப்பு பணிகள் குறித்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு நவம்பர் 29-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.