நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? உயர் நீதிமன்றம் கேள்வி!
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது எப்படி என விசாரிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் தான் கைமாற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
கொலை வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன், இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வரும் போது, காரணத்தை கூறி, காவல்துறை விசாரணையை தாமதப்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது எப்படி? என விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.