நீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்காச்சோள பயிர்கள்!
பெரம்பலூர் மாவட்டத்தில் மற்றொரு ஏரியும் உடைந்ததால் சுமார் 200 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
Advertisement
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 360 ஏக்கர் பரப்பளவு உள்ள அரும்பாவூர் ஏரி கரை உடைந்து நீர் முழுவதும் வெளியேறியது.இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கின. இந்நிலையில் வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் மதகும் போதிய பராமரிப்பு இல்லாததால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் ஏரியில் இருந்த நீர் முழுவதும் வெளியேறி வரும் நிலையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோள பயிர்கள் மூழ்கின. அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரியின் மதகுகள் உடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டும் விவசாயிகள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.