நெருக்கடியில் முகமது யூனுஸ் : நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா? சிறப்பு கட்டுரை!
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. வங்கதேசத்தின் இந்த கோரிக்கையை இந்தியா நிராகரிக்க முடியுமா ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
கடந்த மாதம், இடைக்கால அரசு 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முகமது யூனுஸ், ஹசீனாவை நாடு கடத்தப் போவதாக அறிவித்தார்.
மேலும், ஷேக் ஹசீனா ஆட்சியில் நடந்த ஒவ்வொரு கொலையிலும் நீதியை உறுதிப்படுத்த போவதாகவும், தப்பியோடிய சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்பவேண்டும் என இந்தியாவிடம் கேட்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
அரசுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனையடுத்து, இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ், ஹசீனாவின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்குக் கொண்டு வர நடத்தப்பட்ட போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20,000 பேர் காயமடைந்ததாகவும் குற்றம்சாட்டிருந்தார்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 42 கொலை வழக்குகள் உட்பட 51 வழக்குகள் தொடரப் பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்குப் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் செய்ததாக பல முன்னாள் அமைச்சர்கள், அரசு ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில், வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தவுஹித் ஹொசைன் “நீதித் துறை நடவடிக்கைக்காக ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு திரும்ப அழைத்து வர விரும்புவதாகவும், இது தொடர்பாக இந்திய அரசுக்கு வாய்மொழியாக குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, வங்கதேச உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், அதற்கான செயல்முறை தொடங்கப் பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இனப்படுகொலை செய்து வருகிறது என்றும், சிறுபான்மையினரை, குறிப்பாக இந்துக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியிருந்தார். மேலும், மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, டாக்கா சென்று திரும்பிய சில நாட்களுக்குள் பிறகு ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரிக்கை வந்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனா நாடு கடத்தல் கோரிக்கை தொடர்பாக வங்கதேச தூதரகத்திடம் இருந்து கடிதம் வந்ததை உறுதிப்படுத்தியுள்ள மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த விஷயத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
எல்லை தாண்டிய வன்முறை மற்றும் தீவிரவாதத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவுக்கும், வங்க தேசத்துக்கும் இடையே 2013ம் ஆண்டில், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் கைதிகளை ஒப்படைப்பதற்காக கொண்டு வரப்பட்ட முக்கிய திருத்தம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக அரசியல் பிரச்சினைகளின் போது நாடு கடத்தப்படுவதை இந்த ஒப்பந்தம் நிராகரிக்கிறது.
எனவே, முகமது யூனுஸ் அரசின் ஒப்படைப்பு கோரிக்கையை எதிர்த்து ஷேக் ஹசீனா நீதிமன்றத்தை அணுகவும் வாய்ப்பிருக்கிறது. அதுவரை ஷேக் ஹசீனா இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்