நெல்லையில் தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் - உரிய விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!
நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் மகன் எடுத்துச் சென்றது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் 18 கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்றதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த அவல நிலைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதநேயமற்ற நடத்தை தான் காரணமாகும். மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியை அடுத்த வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த சிவகாமியம்மாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற கடைசி வரை மருத்துவமனை முயன்றிருக்க வேண்டும். அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் கூட, அந்த மூதாட்டியின் உடலை மரியாதையுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
ஆனால், அதை செய்யாத நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், உயிருக்கு கடுமையாக போராடிக் கொண்டிருந்த நிலையிலேயே சிவகாமியம்மாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி அவரது மகன் பாலனிடம் கூறியது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.
மருத்துவமனையிலிருந்து சிவகாமியம்மாளை அழைத்துச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்து விட்டதால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாத பாலன், தமது தாயாரின் உடலை மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார். இப்படி ஒரு நிலை ஏற்படுவதை மருத்துவமனை நிர்வாகம் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிவகாமியம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக அவரது மகன் பிடிவாதம் பிடித்ததால் தான், வேறு வழியின்றி அனுப்பி வைக்க நேரிட்டதாக மருத்துவக் கல்லூரி முதன்மையர் ரேவதி கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழகத்தின் பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகளில் உயிரிழக்கும் நிலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது. நோயாளிகளின் உறவினர்களே பிடிவாதம் பிடித்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அதை அனுமதிக்கக் கூடாது என்றும் அன்புமணி கூறியுள்ளார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து எத்தகைய சூழலில் சிவகாமியம்மாள் அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் உயிரிழக்கும் நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
சிலர் சென்டிமெண்ட் காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறவினர்கள் விரும்பினால், மருத்துவப் பணியாளர்களின் கண்காணிப்பில், உரிய வசதிகள் கொண்ட அவசர ஊர்தி வாயிலாக மட்டுமே அவர்கள் அனுப்பி வைக்கப்படுவதை மருத்துவமனை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.