நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் - கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு!
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது.
கேரளாவில் உள்ள புற்றுநோய் மையத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மருத்துவ கழிவு தொடர்பாக கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளதாக கூறி அதன் நகல் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கேரள புற்றுநோய் மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவனைகள், கழிவுகளை சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் கொட்டி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் பதிவு செய்த தீர்ப்பாயம், தமிழ்நாட்டில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களில் கேரள அரசு பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.