நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் - அகற்றும் பணியில் கேரள பணியாளர்கள் தீவிரம்!
நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை கேரள சுகாதாரத் துறையினர் மற்றும் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
Advertisement
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு நெல்லையில் உள்ள நடுக்கல்லூரில் கொட்டப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், வருவாய்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும், கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை கேரள மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அகற்றவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனிடையே, இந்த விவகாரத்தில், இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்த போலீசார், குப்பை கொட்ட உதவிய மாயாண்டி மற்றும் ஏஜெண்ட் மனோகர் ஆகியோரை கைது செய்தனர். மேலும், லாரி உரிமையாளர் செல்லத்துரை, தனியார் நிறுவன மேலாளர் நிதின் ஜார்ஜ் ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், கேரள மருத்துவ கழிவுகளை கேரள அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, இன்று காலை முதல் டாரஸ் லாரிகள் மூலம் மருத்துவ கழிவுகளை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இன்று இரவுக்குள் மருத்துவ கழிவுகள் முழுவதும் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.