நெல்லை மாவட்டத்தில் குறைந்தது மழை!
நெல்லை மாநகரப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளது.
மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளது. மணிமுத்தாறு அணையில் 91 அடி நீரும், பாபநாசம் அணையில் 82 அடி நீரும் உள்ளது. தாமிரபரணி ஆற்றில், 70 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
கனமழையால் மாவட்டத்தில் உள்ள கூடுதாழை, உவரி, இடிந்தகரை, கூத்தன் குழி மற்றும் பெருமணல் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆயிரத்து 500 நாட்டுப் படகுகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு. பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முக்கூடலில் முகாமிட்டுள்ளனர்.