பகலில் பிரியாணி விற்பனை, இரவில் பாலியல் அத்துமீறல் : பல்கலையில் கேள்விக்குறியான பாதுகாப்பு - சிறப்பு தொகுப்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர் பற்றிய பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னணி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதன்மையானதாக திகழும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அப்படியான பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கும் விடுதியில் தங்கி கல்வி பயிலும் அந்த மாணவி, கடந்த 23 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் புகுந்து அதனை வீடியோப் பதிவு செய்ததோடு, ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருப்பதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராதமாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்படி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற குறிப்பிட்ட நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவ, மாணவியர்கள் அல்லாத நபர்களின் தொலைபேசி சிக்னலை ஆராய்ந்து அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
விசாரணையின் போது ஞானசேகரன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான ஞானசேகரனின் பின்னணியை ஆராயும் போது பல்வேறு பகிர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலையில் நடைபாதையில் பிரியாணி கடை வைத்திருக்கும் ஞானசேகரன், கடையை நடத்திவந்த படியே பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் செயல்பாடுகளையும் நோட்டமிட்டு வந்துள்ளார். பகல் நேரத்தில் நகரும் பிரியாணிக் கடையை நடத்திக் கொண்டே இரவு நேரங்களில் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் தனிமையில் சந்தித்து பேசும் காதலர்களை வீடியோ பதிவு செய்து அவர்களை வாடிக்கையாக மிரட்டி வந்திருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் தான் கடந்த 23ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் தனிமையில் உரையாடிக் கொண்டிருப்பதை வீடியோ பதிவு செய்ததோடு, அந்த மாணவரை தாக்கிவிட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பதை ஞானசேகரனே விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம், தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு அண்டை மாநிலங்களிலிருந்து கல்வி பயில வந்து விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கும், அவர்களை மாநிலம் விட்டு மாநிலத்திற்கு படிக்க அனுப்பி வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் கடும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்திவருவதாக காவல்துறை விளக்கம் அளித்திருந்தாலும் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு இதே புகாரில் ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் அருகிலேயே பிரியாணிக் கடை நடத்தி வரும் அளவிற்கு அவரை கண்காணிக்கத் தவறியதாக காவல்துறையினர் மீதும் புகார் எழுந்துள்ளது.
பல்வேறுகட்ட பாதுகாப்பு வளையங்கள் கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநபர் உள்ளே நுழைந்தது எப்படி ? கைதான ஞானசேகரன் இதற்கு முன்பாக தனிமையில் இருந்த எத்தனை காதலர்களை மிரட்டி வீடியோ பதிவு எடுத்து வைத்திருக்கிறார்?
மாணவிகளை மிரட்டி பணம் ஏதேனும் பறித்திருக்கிறாரா? ஞானசேகரனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் ? இவர் தான் உண்மையான குற்றவாளியா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தால் மட்டுமே இந்த வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடையும்.