பங்கு சந்தையில் புதிய வரலாறு - 30 நாட்களில் 47 நிறுவனங்கள் IPO வெளியீடு - சிறப்பு கட்டுரை!
இந்தியாவில் செப்டம்பரில் சுமார் 47 நிறுவனங்கள், ஐபிஓ வெளியீட்டின் மூலம் 16,152 கோடி ரூபாயை மூலதனமாக திரட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஐபிஓ சந்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய பங்கு சந்தையில் முக்கிய சந்தைகளாக ,மும்பை பங்கு சந்தையும்,தேசிய பங்கு சந்தையும் உள்ளன. 1857ம் ஆண்டு தொடங்கப்பட்ட மும்பை பங்கு சந்தையில் ,சுமார் 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொது வெளியில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சந்தையின் மதிப்பு, சுமார் 467 லட்சம் கோடி ரூபாயாகும்.
1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய பங்கு சந்தையில் சுமார் 2500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 463 லட்சம் கோடி ரூபாயாகும்.
தேசிய பங்கு சந்தையின் முக்கிய குறியீடாக, நிஃப்டியும், மும்பை பங்கு சந்தையின் குறியீடாக சென்செக்ஸ்ஸும் உள்ளன. மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பட்டியலிட SME -IPO வசதியும் உள்ளது.
பொதுவாக, IPO எனப்படும் முதன்மை சந்தையில் பட்டியலிட உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்க மட்டுமே முடியும். ஆனால், இரண்டாம் நிலை சந்தையில், பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது என முழு வணிகமும் நடைபெறும்.
இந்தியாவின் இரண்டாம் நிலை சந்தையில் உற்சாகம் அதிகமாக இருக்கும் அதே வேளையில், முக்கிய குறியீடுகள் இப்போது, நாள்தோறும், புதிய உயரங்களைத் தொடுகின்றன. மேலும், IPO எனப்படும் முதன்மை சந்தைகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. கடந்த பத்து வருட காலத்தில், ஒரே ஆண்டில் அதிகபட்ச IPO நிறுவனங்கள் பட்டியலிடுவது இதுவே முதன்முறையாகும்.
நடப்பாண்டில் மட்டும் 252 நிறுவனங்களின் பங்குகள் பொதுவெளிக்கு வந்துள்ளன. இவற்றில் , 229 நிறுவனப் பங்குகள் வெளியான நாளன்றே ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. மொத்தம் 252 நிறுவனங்கள் சுமார் 70,667 கோடி ரூபாயை முதலீடாக திரட்டிய நிலையில், தற்போது அதன் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு, 4 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு செப்டம்பர் மாதத்தில் தான் மிக அதிக அளவிலான நிறுவனங்கள் IPO வாயிலாக நிதி திரட்ட வந்துள்ளதாக, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் மைக்கேல் தேபபிரதா தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பரில் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில்,உலக அளவில் அதிக எண்ணிக்கையில் IPO வெளியிட்ட நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
இரண்டாம் நிலை சந்தையில் அறிமுகமான, 47 நிறுவனங்கள் கூட்டாக ₹16,152 கோடி ரூபாய் திரட்டியதில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் தான் அதிகபட்சமாக 6,560 கோடி ரூபாய் மதிப்பிலான IPOயை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிரீமியர் எனர்ஜிஸ் 2,830.4 கோடி ரூபாய் மதிப்பிலான IPOயை வெளியிட்டுள்ளது. ஏனைய 34 நிறுவனங்களும் SME வகை நிறுவனங்களாகும்.
செப்டம்பரில் பட்டியலிடப்பட்ட 47 நிறுவனங்களில் கிட்டத்தட்ட 61 சதவீதம், அவற்றின் வெளியீட்டு விலையை விடவும் அதிகமான விலைக்கு வர்த்தகம் ஆகின்றன.
குறிப்பாக SME பிரிவில் உள்ள பங்குகள் கிட்டத்தட்ட 100 சதவீதத்துக்கும் அதிகமான பட்டியலிடுவதால் முதலீட்டாளர்கள் அதிகளவில், SME பிரிவில்ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். SME ஐபிஓவான WOL 3D-ன் சில்லறை விற்பனைப் பகுதி 488 மடங்கு விற்பனையாகி உள்ளது. மேலும், கடந்த மாதம் பட்டியலிடப்பட்ட 34 SME ஐபிஓக்களில், 16 ஐபிஓக்கள் எதிர்பாராத வணிகத்தைச் செய்துள்ளன.
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ஓலா எலக்ட்ரிக் மற்றும் பிரீமியர் எனர்ஜிஸ் போலவே, ஹூண்டாய் மோட்டார், ஸ்விக்கி, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், வாரீ எனர்ஜிஸ், மொபிக்விக், என்டிபிசி கிரீன், LIC உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த ஆண்டு IPO-வில் பெருமளவில் வெற்றி காண இருக்கின்றன.
கொரொனா நோய்தொற்றுக் காலத்துக்குப் பின், டீ மேட் கணக்குகளின் எண்ணிக்கையும், பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மேலும், இந்திய பங்கு சந்தையில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களின் வரவும் அதிகரித்துள்ளது. கடந்த 5 வருடங்களாக, பங்கு சந்தையில் முதன்மை சந்தையான IPO வெளியீட்டில் ஆர்வம் காட்டும் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதற்கு, இந்திய பங்கு சந்தை பெரிய அளவிலான இறக்கத்தை காணவில்லை என்பது முக்கிய காரணமாகும். பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது எனபதற்கு இதுவே சான்றாகும். விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்பதற்கும் இதுவே அத்தாட்சி ஆகும்.