படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பு பணி தீவிரம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
மாநிலங்களுக்கு இடையே செல்லும் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் எலூரு மக்களவைத் தொகுதி உறுப்பினர் புட்டா மகேஷ் குமார், வந்தே பாரத் ரயில்களுக்கான டெண்டர் தொடர்பாக அவையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களுக்கு இடையே நீண்டதொலைவு செல்லக்கூடிய படுக்கை வசதியுடன் கூடிய 10 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதுதவிர, மேலும் ஐம்பது வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறிய அவர், ஏற்கெனவே 200 ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த மாதம் வரை மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் 34 ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.