செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பட்டாசு வேண்டாம் : பறவைகள் போதும், அசர வைக்கும் கிராம மக்கள் - சிறப்பு கட்டுரை!

10:00 AM Oct 31, 2024 IST | Murugesan M

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடித்து கொண்டாடும் மக்களுக்கிடையே, தங்கள் ஊருக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் பாதுகாப்பிற்காக ஒரு கிராமமே பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

Advertisement

நெல்லை மாவட்டத்தில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூந்தன்குளம் குக்கிராமம். பல நீர்நிலைகளும், ஏராளமான மரங்களும் நிறைந்து எழில்கொஞ்சும் கிராமமாக காட்சியளிக்கும் கூந்தன்குளத்தை, 1994-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.

பொதுவாக வெளிநாடுகளில் குளிர்காலம் தொடங்கும்பொது அங்குள்ள பறவைகள், தங்கள் இனப்பெருக்கத்திற்காக சீரான சீதோஷண நிலை உள்ள பகுதிகளுக்கு படையெடுத்துச் செல்லும். அப்படி சைபீரியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி போன்ற பல வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள், கூட்டம் கூட்டமாக தங்கிச்செல்லும் இடங்களில் கூந்தன்குளம் கிராமமும் ஒன்று.

Advertisement

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஃபின்டெயில், பிளாக்விங் டுவிஸ்டில், கிரேகிரான், வக்ரா, கிரின்சன் என சுமார் 43 வகையான வெளிநாட்டுப் பறவைகள், இந்த கூந்தன்குளத்தில் தங்கி, கூடு கட்டி, குஞ்சு பொரித்துவிட்டு, சீசன் முடிந்ததும் தங்கள் தாயகத்திற்கு திரும்பிச் செல்லும். இதுபோக செல்கால்நாரை, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பல உள்நாட்டு பறவைகளும் கூந்தன்குளத்திற்கு அவ்வப்போது விசிட் அடிக்குமாம்.

கடந்த பல ஆண்டுகளாக சீசன் காலத்தில் சுமார் 1 லட்சம் பறவைகள் வரை, கூந்தன்குளம் கிராமத்திற்கு வந்து தங்கிச் சென்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்துள்ளதால் பறவைகள் வரத்து குறைவாக உள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், சரணாலயத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, கடல்தாண்டி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவு பயணம் மேற்கொண்டு வரும் பல வெளிநாட்டு பறவைகள், பயப்படாமல் தங்கியிருந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்வு பூர்வமான ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் கூந்தன்குளம் கிராம மக்கள்.

அதற்காக பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் கூட பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வரும் இவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் அந்த எண்ணத்தை ஊட்டி வளர்ப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு கூட தங்கள் குழந்தைகள் புத்தாடைதான் கேட்பார்கள், பட்டாசுகளை கேட்பதில்லை என பெருமிததுடன் கூறுகின்றனர் இந்த கிராமவாசிகள்.

இங்கு வரும் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் விதமாக, கிராம மக்களே தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, பறவைகளின் பாதுகாவலர்களாக வலம் வருவது கூடுதல் சிறப்பு. சுயநலம் நிறைந்த உலகில் தங்கள் சந்தோஷம், தங்கள் தேவை என எதையும் பார்க்காமல் பறவைகளின் பாதுகாப்பை உயர்வென கருதும் கூந்தன்குளம் மக்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்தானே....

Advertisement
Tags :
FEATUREDMAINNellaiDiwalibursting crackersprotect foreign birdsKoonthankulam
Advertisement
Next Article