பணய கைதிகளுக்கு ஹமாஸ் "பரிசுப் பை" : இஸ்ரேல் - காசா மக்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்த போர் நிறுத்த ஒப்பந்தம்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருவது இரு நாட்டு மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
Advertisement
மேற்காசிய நாடுகளுள் ஒன்றான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, கடந்த 2023-ம் ஆண்டு, அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலால் தொடங்கிய இந்த போர், 15 மாதங்களாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்து, பேரழிவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜனவரி 19-ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், ஹமாஸ் தரப்பில் 33 பணய கைதிகளையும், இஸ்ரேல் தரப்பில் 990 பாலஸ்தீனிய கைதிகளையும் விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஜனவரி 20-ம் தேதி 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸும், அதற்கு ஈடாக 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேலும் விடுவித்துள்ளன.
471 நாட்களுக்கு பின் செஞ்சிலுவை சங்கம் மூலமாக இருதரப்பினரும் பணய கைதிகளை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிய நிலையில், குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்ட அனைவரும் கதறி அழுதபடி தங்கள் உறவினர்களை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் காண்போரை கண் கலங்கச் செய்தன.
அதேபோல, நாடு திரும்பிய பாலஸ்தீனியர்களை, மக்கள் தங்கள் பகுதிகளில் அணிவகுத்து நின்று உணர்ச்சி பூர்வமாக கோஷங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.
இதற்கிடையே ஹமாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் விடுவிக்கப்பட்ட 3 பெண் பணய கைதிகளிடமும் 'பரிசு பைகள்' வழங்கப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஹமாஸின் முத்திரை பதிக்கப்பட்ட அந்த பையில், ஒரு நெக்லெஸ், காசாவின் புகைப்படம், பிடிபட்டபோது எடுக்கப்பட்ட பணய கைதிகளின் புகைப்படம் மற்றும் விடுதலை பத்திரம் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.
ஹமாஸின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில ஹமாஸ் ஆதரவாளர்கள் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தினர் நாடு திரும்பிய பணயக் கைதிகளிடம் இருந்து, ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொடுத்தனுப்பட்ட பைகளை பறிமுதல் செய்து சோதனையிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 25-ம் தேதி முதல்கட்ட ஒப்பந்தப்படி மீதமுள்ள 30 இஸ்ரேல் பணய கைதிகளும், சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.
அடுத்த இரண்டு வாரங்களில் மிகவும் சவாலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், போர் முடிவுக்கு வந்து மக்களின் அச்ச உணர்வு முற்றிலுமாக நீங்கும் என்ற நம்பிக்கை இருநாட்டு மக்களிடையே உருவாகியுள்ளது.