பணிக்கு செல்லாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு - உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் சிலர் பணிக்கு செல்லாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர், பணிக்கு செல்லாமல், வேறு ஒருவரை பணியமர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
அந்தவகையில் கிராமப்புறங்களில் பணியாற்றி வரும் மூத்த ஆசிரியர்கள் 1 லட்சம் வரை சம்பளம் பெற்றுவிட்டு,
அவர்களுக்கு பதிலாக வேலைக்கு முயற்சி செய்து வரும் இளைஞர்களை கவர்ந்து 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுத்து பணியில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்து வரும் நிலையில், ஆசிரியர்கள் செய்து வரும் இந்த மோசடியை கண்டு பிடிக்க முடியவில்லையா என அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் துறை சார்ந்த ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து மோசடிகளை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது வகுப்பிற்கு வேறு ஒருவரை அனுப்பிய விவகாரத்தில் தருமபுரி மாவட்டம் கரூரை சேர்ந்த நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பாலாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.