பன்முகத் திறமை கொண்ட கர்ம யோகி ராஜாஜி - சிறப்பு தொகுப்பு!
தேசத்தொண்டையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த மூதறிஞர் ராஜாஜி என்று அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்..
Advertisement
தமிழகத்தின் சேலம் அருகே உள்ள கிருஷ்ணகிரியில் ஓசூருக்குப் பக்கத்தில் உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில் 1878ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி ராஜகோபாலாச்சாரி பிறந்தார். ராஜாஜியின் தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா மற்றும் தாயார் சிங்காரம்மா இருவருமே தேச பக்தியோடு தம் மகனை வளர்த்தனர்.
பெங்களூர் சென்ட்ரல் கல்லூரி, மற்றும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் பயின்ற ராஜாஜி,1900-ம் ஆண்டில் ஒரு வழக்குக்கு அன்றைக்கே 1000 ரூபாய் வாங்கும் அளவுக்கு மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட ராஜாஜி, விடுதலை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக , தனது வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார்.
ரவுலட் சட்ட எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற ராஜாஜி, 1917- ஆம் ஆண்டில், சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1930-ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்திய நேரத்தில் , ராஜாஜி, வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகத்துக்குத் தலைமையேற்று, இந்திய விடுதலைக்காக சிறை சென்றார்.
இதனை தொடர்ந்து, 1937- ஆம் ஆண்டில், மதராஸ் மாகாணத்தின் முதல் மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். முதல் மந்திரிக்கு அரசு நிர்ணயித்த ஆண்டு ஊதியம் 56,000 ரூபாயாகும். ஆனால், அதை அப்படியே ஏற்று கொள்ளாமல், தனது, அடிப்படை தேவைக்களுக்காக வெறும் 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டார் ராஜாஜி.
முதலமைச்சராக இருந்த காலத்தில், சென்னை மாகாணம் முழுவதும் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்திய பெருமைக்கு உரியவர் ராஜாஜியே என்பதை காலம் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது.
1946- ஆம் ஆண்டில், வெள்ளையர்களால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக ராஜாஜி பணியாற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து போராடிய ராஜாஜிக்குப் பதவிகள் தாமாகவே தேடி வந்தன.
சிறந்த நிர்வாகியாக திகழ்ந்த ராஜாஜி, சென்னை மாகாண முதல் அமைச்சர், வங்கத்தின் ஆளுநர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சர் ஆகிய பொறுப்புகளில் திறமையாக மக்கள் பணியாற்றி, தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை பதித்தார்.
ஜவகர்லால் நேருவின் சோஷலிசக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ராஜாஜி, 1959ம் ஆண்டு, சுதந்திரா கட்சியைத் தொடங்கினார்.
1967-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்கினார். முதன்முறையாக, தமிழக அரசியலில், ராஜாஜி, காங்கிரஸ் அல்லாத ஆட்சியை உருவாக்கினார்.
காந்தியத்தை வளர்த்தெடுக்கப் பாடுபட்ட ராஜாஜி, தனது கடைசி காலத்தில், புதுப்பாளையம் என்ற கிராமத்தில் ஆசிரமம் அமைத்து சமூகத் தொண்டாற்றி வந்தார்.கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், ஈ. வே. இராமசாமியுடன் நட்பு பாராட்டியதுடன் அணுஆயுதங்களுக்கு எதிராகவும் போராடி வந்தார்.
ராஜாஜி தன் மகளான லட்சுமியை , மகாத்மா காந்தியின் நான்காவது மகனான தேவதாஸ் காந்திக்குத் திருமணம் செய்து கொடுத்தார். ராஜாஜியின் ஒரே மகன் சி. ஆர். நரசிம்மன் தந்தையின் வழியில் அரசியலில் தொடர்ந்து இயங்கி வந்தார்.
படைப்பாற்றல் மிக்க ராஜாஜி, தமிழிலும் ஆங்கிலத்திலும் அற்புதமான இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். இந்திய இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டையும், எளிமையான தமிழில் தந்திருக்கிறார் ராஜாஜி. சக்கரவர்த்தி திருமகன் என்ற நூலுக்காக சாகித்திய சாகித்ய அகாதமி விருது ராஜாஜி வழங்கப் பட்டது.1954- ஆம் ஆண்டு, இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பாரத் ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் ராஜாஜி என்பது குறிப்பிடத் தக்கது.
எம்.எஸ். சுப்புலட்சுமி இனிய குரலில் இன்றும் ஒலிக்கும் குறை ஒன்றும் இல்லை.. மறைமூர்த்தி கண்ணா என்ற பாடல் ராஜாஜி எழுதியது தான். கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சி.யுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்திவந்தார் ராஜாஜி.
ராஜாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சரியார் 1972-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி, தனது 94-வது வயதில் காலமானார்.
நேர்மை, ஒழுக்கத்துக்குப் பெயர் பெற்ற ராஜாஜி, பொது வாழ்வில் அப்பழுக்கற்றவராக தனது இறுதி மூச்சு உள்ளவரை வாழ்ந்தவர். மது விலக்கு கொள்கையில் ராஜாஜி காட்டிய தீவிரம், மக்களின் மீது அவர் காட்டிய பேரன்பையே காட்டுகிறது.
அரசியல் இலக்கியம் ஆன்மிகம் என பன்முகத் திறமை கொண்ட கர்ம யோகியான மூதறிஞர் ராஜாஜியின் தேசப் பணியை பாராட்டி மகிழ்வோம்.