பயிற்சி மையங்களுக்கு கடிவாளம் : 100% வேலைவாய்ப்பு விளம்பரங்களுக்கு "நோ" - சிறப்பு கட்டுரை!
பயிற்சி நிறுவனங்களின் தவறான விளம்பரங்களைத் தடுக்கும் நோக்கத்தில், மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இந்த புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
மாணவர்கள் தற்கொலை, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமை எனப் பயிற்சி மையங்கள் குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா போன்ற நகரங்களில் உள்ள போட்டி மிகுந்த பயிற்சிச் சூழல் மாணவர்களின் தற்கொலைக்கு வழிவகுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், டெல்லியில், பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், சட்டவிரோதமாக அடித்தள பகுதியில் நடந்த வகுப்பறையில் புகுந்ததில் நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவையெல்லாம், பயிற்சி நிறுவனங்களில், பல மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலைமைகளையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இந்த முறைகேடுகளை எல்லாம் தடுக்கும் வகையில், புதிய விதிமுறைகளை கடந்த ஜனவரி மாதம், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதில், பட்டப்படிப்புக்கும் குறைவாகப் படித்துள்ள நபர்களைப் பயிற்சி மையங்களில் ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது என்றும்,
நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற வைப்பது போன்ற தவறான வாக்குறுதிகளை அளித்துப் பெற்றோர்களைத் திசை திருப்பி மாணவர் சேர்க்கையில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
16 வயதுக்கு உட்பட்டோரை எக்காரணம் கொண்டும் பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது என்றும், இடைநிலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களை மட்டுமே பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும், பயிற்சி மையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு ஏற்ப முறையான கட்டணங்களை மட்டும் வசூல் செய்ய வேண்டும் என்றும், அதை மீறி அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பயிற்சியில் சேரும் மாணவர்கள் அதற்கான முழு தொகையைச் செலுத்தி விட்டு பாதியில் பயிற்சியை நிறுத்தினால் மீதமுள்ள தொகையை 10 நாள்களுக்குள் பயிற்சி மையங்கள் திருப்பி வழங்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த மூன்று மாதங்களுக்குள், ஏற்கெனவே உள்ள பயிற்சி மையங்கள் மற்றும் புதிய மையங்கள் என அனைத்து பயிற்சி மையங்களும் அரசிடம் முறையாக பதிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தச் சூழலில், வரைவு செய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்குக் கடுமையான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விளம்பர வழிகாட்டுதல்கள், பயிற்சி மையங்களின் பாட விவரங்கள் மற்றும் கால அளவு, பயிற்றுவிக்கும் ஆசிரியரின் தகுதிச் சான்றுகள், பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சிக்குக் கட்டிய பணத்தை இடையில் திரும்பப்பெறும் கொள்கைகள், தேர்வு விகிதங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் பற்றி தெளிவான விதிகளை நிர்ணயித்துள்ளது.
மேலும், வேலை வாய்ப்புக்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கும் பொய் விளம்பரங்களைத் தடை செய்தும் இருக்கிறது . வருங்கால மாணவர்களை தவறாக வழிநடத்தும் தவறான விளம்பர நடைமுறைகளைத் தடுக்க புதிய விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய வழிகாட்டுதல்களின்படி, பயிற்சி நிறுவனங்கள் தங்கள் ஆசிரியர்களின் தரம், உள்கட்டமைப்பு, கட்டணங்கள் அல்லது பணத்தைத் திரும்பப்பெறும் கொள்கைகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட உரிமை கோரல்களைச் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விதிகளின்படி, பயிற்சி மையங்கள் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி வெற்றிகரமான விண்ணப்பதாரர்களின் பெயர்கள், புகைப்படங்கள் அல்லது சான்றுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன, அவை தேர்வுக்குப் பின் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும், AICTE மற்றும் UGC போன்ற அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் சேவைகள், வசதிகள் மற்றும் பாடநெறி அங்கீகாரம் ஆகியவற்றைப் பயிற்சி மையங்கள் துல்லியமாகப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள், மாணவர்களை ஏமாற்றும் விளம்பரங்களில் இருந்து பாதுகாக்கவும், பயிற்சித் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் நோக்கமாக உள்ளது என்றும் நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே கூறியிருக்கிறார்.
பயிற்சி மையங்கள் வேண்டுமென்றே மாணவர்களிடமிருந்து முக்கியமான தகவல்களை மறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த வழிகாட்டுதல்கள் பயிற்சித் துறையில் உள்ளவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இந்த புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப் பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களை மீறினால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளன. முன்னதாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் பல பயிற்சி நிறுவனங்களுக்கு இதுவரை, சுமார் 54.60 லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் , மாணவர்கள் மீதான சுரண்டலைத் தடுத்து, இந்திய கல்விமுறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.