பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் - காவல்துறை அனுமதி!
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கிராம மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
விமான நிலைய எதிர்ப்பு குழுவை அமைத்து, நாள்தோறும் இரவு நேரங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்ட நிலையில், மக்களை சந்திக்க அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு த.வெ.க சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, வரும் 20 ஆம் தேதி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.