பரிதவிக்கும் விவசாயிகள்! : ஒற்றை பனைமரம் மூலம் ஆற்றை கடக்கும் அவலம்!
திருச்சி அருகே வாய்க்காலின் குறுக்கே ஒற்றை பனைமரத்தை போட்டு ஆபத்தான நிலையில் அதனை கடக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக் கடக்கும் விவசாயிகள் குறித்தும், அவர்களின் கோரிக்கை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட எலமனூர் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களும், 750 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களும் உள்ளன. காவிரி கரையோர பகுதி என்பதால் வாய்க்கால் பாசனமே விவசாயத்திற்கு முக்கிய பங்காக அமைந்திருக்கிறது. விவசாய தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கும் இப்பகுதியில் வாழை, நெல், பூக்கள் சாகுபடி அதிகளவில் உள்ளன. காவிரி ஆற்றில் இருந்து செல்லும் கிளை வாய்க்காலான கொடிங்கால் வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படாத நிலையில், அதன் குறுக்கே பாலமும் கட்டப்படாத காரணத்தினால் பொதுமக்களும், விவசாயிகளும் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொடிங்கால் வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாத காரணத்தினால் வாய்க்காலுக்கு எதிர்புறம் உள்ள சுமார் 150க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு நிலங்களில் விவசாய சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. நெல் மூட்டைகளையும், உரங்களையும் வாய்க்காலின் குறுக்கே ஒற்றை பனைமரத்தை போட்டு அதில் ஆபத்தான முறையில் வாய்க்காலை கடக்கும் சூழலுக்கு விவசாயத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆபத்தான சூழலை பார்த்து வெளியூர்களிலிருந்து கூலித் தொழிலாளர்கள் கூட வேலைக்கு வர மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஆண்களின் துணையின்றி பெண்களால் இந்த வாய்க்காலை கடக்க முடியாத சூழலும் நிலவுகிறது. பஞ்சாயத்து தலைவர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நிறைந்திருக்கும் கொடிங்கால் வாய்க்காலை தூர்வாருவதோடு, அந்த வாய்க்காலின் குறுக்கே நிரந்தரமான பாலம் கட்டித்தருவதுமே அப்பகுதி விவசாயிகளுக்கு அரசு ஏற்படுத்தித் தரும் பாதுகாப்பாக இருக்கும்.