பறிமுதல் செய்த பணத்தை வீடியோ எடுக்க அனுமதி மறுப்பு!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி கணக்கில் வராத 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது அதிகாரியின் அனுமதி இன்றி உள்ளே சென்று வீடியோ எடுக்க கூடாது என்று கூறிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் செய்தியாளர்களை வெளியேற்றினர். இதையடுத்து செய்தியாளர்களுக்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.