பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் - அண்ணாமலை உறுதி!
பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையத்தில், ஒரே குடும்பத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் சம்பவத்தில், 42 நாட்கள் ஆகியும், இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருக்கும் திமுக அரசைக் கண்டித்து, இன்று பொங்கலூர் கொடுவாய் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
தொடர்ந்து சில ஆண்டுகளாகவே இந்தப் பகுதியில், தனியாக இருப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதையும், எந்த வழக்கிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பதையும் கருத்தில் கொண்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று நடைபெற்ற இந்தப் படுகொலை சம்பவத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று, கடந்த டிசம்பர் 6 அன்று, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பாக கடிதம் எழுதினோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டவுடன், சிபிஐ விசாரணைக்கு தமிழகத்திலிருந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்துவிட்டார் முதலமைச்சர்.
இதனால், இந்த வழக்கை சிபிஐ தன்னிச்சையாக விசாரிக்க முடியாமல், தமிழக அரசு அனுமதிக்காகக் காத்திருக்க நேர்ந்திருக்கிறது. சிபிஐ விசாரணை கோரி முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி ஒரு மாதம் கடந்தும், இன்னும் குற்றவாளிகளைக் கைது செய்யவோ, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவோ திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததால், பொங்கலூர் ஒன்றியத்தில், 50,000 பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பொதுமக்களோடு ஆளுநரைச் சந்தித்து, மூவர் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கத் தொடர்ந்து உழைத்து வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூர் பகுதி தலைவர்கள் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிச்சயம், இந்த வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்து, எந்தத் தவறும் செய்யாமல் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும்வரை, தமிழக பாஜக தொடர்ந்து போராடும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.