பல்லுயிர் தளத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு - கோயிலைப் பாதுகாக்கத் தீக்குளிக்கத் தயார்!
பல்லுயிர் பாரம்பரிய தளம் அமைப்பதற்கு ஒரு கிராமமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 800 ஆண்டுகள் பாரம்பரியமான கோயிலைப் பாதுகாக்கத் தீக்குளிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறுகின்றனர் கிராம மக்கள். அவர்களின் கோரிக்கை என்ன?... விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.....
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் காசம் பட்டி கிராமத்தில் சுமார் 12 ஏக்கர் 48 செண்ட் வனப்பகுதியில் அமைந்துள்ளது வீரகோயில். இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அத்துடன் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்புப் பூஜையும் நடைபெற்று வருகிறது. 800 ஆண்டுகள் பழமையான, பாரம்பரியமிக்க வீரகோவில் வனப்பகுதியை காசம் பட்டி கிராம மக்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். வனப்பகுதியில் ஆண்கள் காலணி அணிந்து செல்லக் கூடாது, பெண்களுக்கு அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை இன்றளவும் அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சக்திவாய்ந்த தங்கள் தெய்வத்தின் இருப்பிடத்திற்கு ஆபத்து வந்துள்ளதாகக் கருதுகிறார்கள் காசம் பட்டி கிராம மக்கள். வீரகோயில் வனப்பகுதியில் 32 வகை பறவைகள், 26 வகை வண்ணத்துப்பூச்சிகள், தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்களும் உள்ளன. இதனால், அப்பகுதியைச் சமீபத்தில் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு.
பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளதால் வீரகோவில் வனப்பகுதி, வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காசம் பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்லுயிர் பாரம்பரிய தளம் தங்களுக்கு வேண்டாம் எனவும், வீரகோயில் மட்டும் போதும் எனவும் ஊர்மக்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
"பல்லுயிர் பாரம்பரிய தளம் அமைந்தால் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும், கோயில் கட்டுப்பாடுகள் அழிந்துவிடும், யார் வேண்டுமானாலும் கோயில் வனப்பகுதிக்குள் சென்று பாரம்பரியத்தைச் சீர்குலைக்கக் கூடும்" என வேதனையுடன் கூறுகிறார் காசம் பட்டி கிராம நாட்டாமை பொதியழகன்.
வீரகோவில் பகுதியைப் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்ததைத் திரும்பப் பெறவில்லை என்றால் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அரசிடமே ஒப்படைத்துவிட்டு போராட்டம் நடத்துவோம் எனக் கூறுகிறார் காசம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள்.
தங்கள் முன்னோர்கள் பாரம்பரியமாகக் கட்டிக் காத்த வீரகோவில் வனப்பகுதிக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தீக்குளிக்கவும் தயாராக உள்ளோம் என உணர்ச்சிப் பெருக்குடன் கூறுகிறார் தாமரைச்செல்வி.
மேலும், பல்லுயிர் பாரம்பரிய தள அறிவிப்பைத் திரும்பப் பெறவில்லை என்றால் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று திமுக பிரமுகர் தெய்வம் திட்டவட்டமாகக் கூறினார். வீரகோயில் வனப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் அமைந்தால் தங்கள் முன்னோர்களின் வாக்கும், தங்களது நம்பிக்கையும் அழிந்து விடும் என காசம் பட்டி மக்கள் கவலைப்படுகின்றனர். அவர்களின் கோரிக்கைக்குத் தமிழக அரசு செவிசாய்க்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.