பழிவாங்கும் நோக்கத்தில் மனைவி வழக்கு? - விரக்தியில் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை!
பெங்களூருவை சேர்ந்த பொறியாளரின் தற்கொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜீவனாம்ச தொகை வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
Advertisement
பெங்களூரில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ், தன் மீது மனைவி பொய் புகார்களை சுமத்தியதாகவும், பெரும் தொகையை ஜீவனாம்சமாக கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறி தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்ட 90 நிமிட வீடியோ பதிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஜீவனாம்சம் வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.
அதன்படி மனைவியின் சமூக மற்றும் நிதி நிலையை கருத்தில் கொண்டும், குழந்தைகளின் நியாயமான தேவைகள் அடிப்படையிலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல மனைவியின் கல்வித்தகுதி, வேலை மற்றும் வருமானத்தை கருத்தில்கொண்டு ஜீவனாம்ச தொகையை நிர்ணயிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ள நபர், குடும்ப நலனுக்காக பணியை தியாகம் செய்தாரா அப்படி தியாகம் செய்திருந்தால் வழக்குக்காக அவர் செலவு செய்த தொகை ஆகியவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, கணவரின் திறன், வருமானம், அவருக்கான பொறுப்புகள் ஆகியவற்றையும் பொறுத்தே ஜீவனாம்ச தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.