பாகிஸ்தானுக்கு செக் : இந்தியாவின் நட்பை நாடும் தாலிபான் அரசு - சிறப்பு கட்டுரை!
இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், தலிபான் அரசின் உயர் அமைச்சரைச் சந்திப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு எந்த அளவுக்கு நன்மையாக அமையும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜாகீர் ஷாவின் ஆட்சி காலம் வரை இந்தியா உடனான நல்லுறவை ஆப்கானிஸ்தான் கொண்டிருந்தது. 1979ம் ஆண்டு முதல்,1989 ஆம் ஆண்டு வரை இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் உறவு தடைப்பட்டிருந்தாலும், அந்நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது.
தாலிபனை ஒருபோதும் இந்தியா அங்கீகரிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் 1990-களின் மத்தியில் தாலிபான்களின் ஆட்சி அமைந்தபோது, இந்தியா ஒருபோதும் அந்த நாட்டுடன் உறவு வைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும், ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா பாடுபட்டது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு காந்தகாருக்கு கொண்டு செல்லப்பட்டபோதுதான், இந்தியா, தலிபான்களுடன் முதலும் கடைசியுமாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் இந்தியா எப்போதும் தாலிபான்களிடம் இருந்து விலகியே இருந்தது.
ஆப்கானிலிருந்து, அமெரிக்கப் படைகள் திரும்ப அழைத்துக்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு முன்பு தோகாவில் தாலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அப்போதும், இந்தியா தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட கூடாது என்று முடிவு செய்தது. சொல்லப் போனால் தாலிபான் தலைமையுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்த கூட இந்தியா மறுத்துவிட்டது.
தாலிபானின் முந்தைய ஆட்சிக்கும் இப்போதைய ஆட்சிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், முந்தைய தாலிபான் ஆட்சி உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை ரஷ்யா மற்றும் சீனா தாலிபானை அங்கீகரிக்கின்றன.
அதனால்தான், பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு இந்த முறை இந்தியா, தாலிபான்களுடன்உறவை மேம்படுத்துவதை மிக முக்கியமானதாக கருதுகிறது. இந்தியா தாமதிக்கக் கூடாது. ஏனெனில் இந்தியா தாலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தாமதித்தால், அதை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து உள்ளது. ஆகவே தான் இந்தியா இந்த முறை முந்திக் கொண்டது.
அண்மையில், ஆப்கானிஸ்தான் மீது எல்லைத் தாண்டி, பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கண்டித்தது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவுத் துறை அமைச்சர் மவுல்வி அமிர் கான் முத்தாக்கியை துபாயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைக்கு இணங்க, இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை ஆப்கனிஸ்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார நட்பு நாடாக இந்தியாவை ஆப்கானிஸ்தான் நம்புகிறது என்று என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானில் உள்ள சபகர் துறைமுகம் மூலம் வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுவது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகமும், ஆப்கானிஸ்தான் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் வகையில் இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதையும் பரிசீலித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இதுவரை தாலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கனிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை, 300 டன் மருந்துகள், 27 டன் பூகம்ப நிவாரண உதவி, 40,000 லிட்டர் பூச்சிக்கொல்லிகள், 100 மில்லியன் போலியோ டோஸ், 1.5 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி, 1.2 டன் எழுதுபொருள் கருவிகள் உட்பட பல அத்தியாவசிய பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானுக்கு இந்தியா அனுப்பியிருப்பது குறிப்பிடத் தக்கது.
ஆப்கானிஸ்தானில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க தயாராக இருப்பதாக சீனா மற்றும் ரஷ்யா தெரிவித்துள்ளன. இந்த சூழலில், இந்தியா - ஆப்கனிஸ்தான் இடையேயான இந்த உயர்மட்ட சந்திப்பு பாகிஸ்தானை மேலும் பலவீனமாக்கும் என கருதப்படுகிறது.