For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாகிஸ்தான் vs தலிபான் போர்! : இந்தியாவுக்கு லாபமா?

09:05 PM Dec 30, 2024 IST | Murugesan M
பாகிஸ்தான் vs தலிபான்  போர்      இந்தியாவுக்கு  லாபமா

தலிபான்களுடனான பாகிஸ்தானின் உறவு முறிந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீது தாலிபான்கள் எதிர் தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கான பின்னணி என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

எவ்வளவு தான் தாம் வளர்த்த பாம்பு அடுத்த வீட்டுக்காரனைத் தான் கடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது. ஒரு நாள், பாலூட்டியவனையே அந்த பாம்பு கடிக்கும். தன்வினை தன்னைச் சுடும். இப்போது பாகிஸ்தானுக்கு அதுதான் நடக்கிறது. பல ஆண்டுகளாக பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட தலிபான்கள் இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தான் எல்லையில் சுமார் 15,000 தாலிபான் போராளிகள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன?

Advertisement

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா தலைமையிலான 40க்கும் மேற்பட்ட நாடுகளை எதிர்த்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஒரு நீடித்த போரை நடத்தி வந்தனர். அந்த காலகட்டத்தில், தாலிபான் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் கிராமங்களில் அடைக்கலம் பெற்றனர். குவெட்டா, பெஷாவர் மற்றும் பின்னர் கராச்சி போன்ற பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் தலிபான் தலைவர்கள் சுதந்திரமாக வசித்து வந்தனர்.

குறிப்பாக, தலிபான் இயக்கத்தின் நிறுவனரான முல்லா முஹம்மது உமர், தாருல் உலூம் ஹக்கானியா உட்பட பெரும்பாலான தாலிபான்கள் பாகிஸ்தான் இஸ்லாமிய மதப் பள்ளிகளில் தான் பட்டம் பெற்றுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில், தாலிபான் இயக்கத்துக்கு பாகிஸ்தான் உதவியது. சொல்லப்போனால் தtலிபான் தீவிரவாதிகளின் சரணாலயமாகவே பாகிஸ்தான் விளங்கியது. பாகிஸ்தானின் உதவி இல்லாமல், 2003ம் ஆண்டு, தலிபான்களின் வெற்றிகரமான எழுச்சி மிகவும் சாத்தியமாகி இருக்காது என்பது தான் உண்மை.

Advertisement

இந்த பின்ணணியில், 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இதனையடுத்து ஆட்சி அதிகாரம் தலிபான்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லை பகுதியான டோர்காம் என்ற இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து,தலிபான்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தலிபான்கள் அதிகாரத்துக்கு வந்ததை , அதுவரை அடிமைபட்டிருந்த ஆப்கான் மக்கள் விடுதலை பெற்றதாக பாராட்டினார்.

தலிபான்களை உலக நாடுகள் எதுவும் அங்கீகரிக்க யோசித்த நிலையில், முதல் முதலாக பாகிஸ்தான் தான் அங்கீகரித்தது. இப்படி இணைபிரியா நட்பாக இருந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தற்போது போர் மூண்டிருக்கிறது.

1947ம் ஆண்டு பாகிஸ்தான் தனி நாடான போது ,பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பிரிக்கும் Durand Line என்னும் எல்லை கோடு அமைக்கப் பட்டது. பாகிஸ்தான் அந்த எல்லை கோட்டில் முழுவதுமாக வேலி அமைத்துள்ளது. ஆனால், இதுவரை இருந்த எந்த ஆப்கான் அரசும் Durand Line கோட்டை முறையாக அங்கீகரிக்கவில்லை. தலிபான்களும் Durand Lineக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெற்றி, போரை பாகிஸ்தான் மீது திருப்பியது. 2022 ஆம் ஆண்டு முதல், பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீதும் தலிபான்கள் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு, பாகிஸ்தான் தலிபான் என்று அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP)என்று அமைப்பு பொறுப்பேற்றது.

பாகிஸ்தானிலும் தாலிபான்களின் ஆட்சியை ஏற்படுத்துவது தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பின் நோக்கமாகும். எனவே TTP அமைப்பினர் பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகிறார்கள்.

பாகிஸ்தானுடனான ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் உள்ள TTP தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைகளை தாலிபான் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு காலத்தில், தாலிபான் நடவடிக்கைகளை பாகிஸ்தானில் கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்கான் அரசும் வைத்த கோரிக்கைகளை பாகிஸ்தான் நிராகரித்தது.

அப்போதைய பாகிஸ்தானைப் போலவே, தாலிபான்களும் இப்போது TTP, பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினை என்றும், அந்த பிரச்சினைகளை உள்நாட்டிலேயே பாகிஸ்தான் தீர்க்க வேண்டும் என்றும் தாலிபான்கள் கூறிவிட்டனர்.

பலுசிஸ்தானில் சீனா முதலீடு, உள்நாட்டில் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில், பாகிஸ்தான் தாலிபானுக்கு எதிரான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாதம் என்று சொல்லி ஆப்கான் மீது பொருளாதார கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் விதித்தது. சுமார் 5,00,000 ஆவணமற்ற ஆப்கானிஸ்தான் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றியது. ஆப்கானுக்கு கடுமையான விசா நடைமுறைகளைக் கொண்டு வந்தது. மேலும் TTP மீதான ராணுவ நடவடிக்கைகளும் அதிகரிக்கப் பட்டது. இப்படியே தலிபான்களுக்கும் பாகிஸ்தான் இடையிலான உறவு மோசமானது.

சில நாட்களுக்கு முன், ஆப்கானிஸ்தானில் உள்ள பர்மால் மாவட்டத்தில் முர்க் பஜார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விமான தாக்குதல்களை மேற்கொண்டது.

ஆப்கான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் கோழைத்தனமான செயலுக்கு பதிலடி கொடுப்போம் என்று ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, எல்லை மாகாணங்களில் பாகிஸ்தான் மீது ஆப்கான் தாக்குதல்களைத் தொடங்கி உள்ளது. இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போர் பெரும் ஆபத்தாக முடியலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தியாவுடன் நட்பபை மேம்படுத்த விரும்புவதாக தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மகன் முல்லா யாகூப், தெரிவித்திருந்தார். அதற்கேற்ப மும்பையில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தலிபான் அதிகாரி பணிபுரிய இந்தியா அனுமதியளித்தது. இதன் மூலம், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உள்ளிட்ட உறவுகள் வலுப் பெற்றுள்ளன.

Advertisement
Tags :
Advertisement