பாஜக மாநில தலைவர் பதவி : நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல்!
பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனுவை அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்தார்.
Advertisement
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது.
அதன்படி தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாஜக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைச் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மாநில தலைவர் பதவிக்காக அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன.
அதனடிப்படையில், தமிழக பாஜக-வின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைக் கட்சி தலைமைமூலம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.