பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு - தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு இருவேறு வழக்குகளில் விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரலில் பெரியார் சிலை மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, கடந்த வாரம் பாஜக தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் மேல் முறையீட்டு வழக்கு முடிவு காணும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நீட்டிக்க வேண்டும் என ஹெச்.ராஜா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கும் வரை ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், ஹெ.ச்.ராஜாவின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.