பாமக பொதுக் குழு கூட்டத்தில் நிர்வாகி நியமனம் தொடர்பாக கருத்து வேறுபாடு - டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே வாக்குவாதம்!
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார்.
இதை ஏற்க மறுத்த பாமக தலைவர் அன்புமணி, கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்க வேண்டாம் என்றும், முகுந்தனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆவேசமடைந்த டாக்டர் ராமதாஸ், இது தாம் உருவாக்கிய கட்சி என்றும், கட்சியை விட்டு போவதாக இருந்தால் வெளியேறலாம் என்றும் கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
டாக்டர் ராமதாஸின் பேச்சை சற்றும் எதிர்பார்க்காத அன்புமணி, பனையூரில் தனியாக தாம் அலுவலகம் திறந்து இருப்பதாகவும், தன்னை வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வரலாம் என்றும் அறிவித்தார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான வாக்குவாதத்தால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.