பாமக-திமுக வலுக்கும் மோதல்! : முதலமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் பாமகவினர்!
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் பேச்சு அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் முதலமைச்சருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
Advertisement
அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையுமே உலுக்கிக் கொண்டிருக்கும் அதானி மீதான ஊழல் புகாரில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம்பெற்றிருப்பது தமிழக அரசியல் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் - அதானி குழும தலைவர் கவுதம் அதானிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை நங்கநல்லூர் அருகே திட்டம் ஒன்றை தொடங்கி வைக்க வந்த முதலமைச்சரிடம், ராமதாஸின் அறிக்கையை சுட்டிக்காட்டி பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உரிய பதிலை அளிக்காமல் ராமதாஸிற்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என அலட்சியமாக பேசிவிட்டு சென்றார்.
முதலமைச்சரின் இந்த பேச்சு பாமகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாமகவின் தலைவரும், ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ், ”தமிழக மானம் அமெரிக்காவில் கப்பலேறுகிறது, மக்கள் பணம் கொள்ளை போகிறது, இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என முதலமைச்சரை அன்புமணி காட்டமாக விமர்சித்திருந்தார்.
ராமதாஸை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் முதலமைச்சரை விமர்சிக்கத் தொடங்கிய பாமகவினர், ராமதாஸின் சாதனைகளாக கூறப்படுபவைகளை பட்டியலிட்டு விவாதிக்க தொடங்கினர். இதற்கிடையில் ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் பேச்சு ஆணவப்போக்கை வெளிப்படுத்துவதாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதற்கிடையில் பாமக நிறுவனர் ராமதாஸின் குற்றச்சாட்டு தொடர்பாக முதலமைச்சரின் கருத்தில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதற்காக மன்னிப்பு கேட்கும் பழக்கமில்லை எனவும் தெரிவித்தார்.
எதற்கெடுத்தாலும் ஊழல் குற்றச்சாட்டை கூறுவது பாமக நிறுவனர் ராமதாசுக்கு வந்தது கைவந்தது கலை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதியின் பேச்சு பாமகவினர் மத்தியில் கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பாமகவினர் முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம், அரியலூர், சேலம், ஈரோடு, கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர் என பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸின் பேச்சு குறித்து முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை அறிக்கைகளாக வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்த்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த பேச்சை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்பது தான் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.