செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பாம்பு பிடி வீரர்களின் உயிர் பறிபோகும் அவலம் : உதவிக்கரம் நீட்டுமா அரசு?

09:15 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கும் பாம்பு பிடி வீரர்கள், பாம்புகள் கடிப்பதால் உயிரிழக்கும் நிலை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பாம்புகள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன. அப்பகுதிகளில் அதிக விஷமுள்ள நாகப்பாம்பு, கோதுமை நாகம், கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் உள்ளிட்ட பல வகையான பாம்புகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது வாடிக்கை.

இப்படி பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகள் அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறும்போது, மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும், பாம்புகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் அவற்றைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடவும் வனத்துறைக்கு உதவியாகச் செயல்படுபவர்கள் பாம்பு பிடி வீரர்கள். சமூக சேவை மனப்பான்மையுடன் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பாம்புகளைப் பிடித்து வரும் இவர்கள், அண்மைக் காலமாகப் பாம்புகள் கடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது பாம்பு பிடி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குறிப்பாகக் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரைக் கடந்த 2 ஆண்டுகளில் பாம்பு கடித்து 6 பாம்பு பிடி வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 20-க்கும் மேற்பட்டோர் பாம்பு கடித்ததால் கை, கால் மற்றும் கண் பார்வை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஓராண்டுக்கு முன் பாம்பு கடித்துப் பாதிக்கப்பட்ட சிறுமுகை பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் காஜா மைதீன், கோமா நிலைக்குச் சென்று ஓராண்டுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதேபோல, அண்மையில் பாம்பு கடிபட்ட வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமார், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபோன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபடும் பாம்பு பிடி வீரர்களுக்குத் தமிழக அரசின் வனத்துறை சார்பில், பாம்புகளைக் கையாள்வதற்கான உரியப் பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல, பாம்பு பிடி வீரர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாம்புகளிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கவும், மக்களிடம் இருந்து பாம்புகளைப் பாதுகாக்கவும், தங்கள் உயிரைப் பணயமாக வைக்கும் பாம்பு பிடி வீரர்களுக்கு அரசு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதே பாம்பு பிடி வீரர்களின் கோரிக்கையாக உள்ளது. பாம்புக் கடியால் பாதிக்கப்பட்ட பாம்பு பிடி வீரருக்கு மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளை அரசு ஏற்க வேண்டும், எதிர்பாராத விதமாக உயிரிழப்பு நேரும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றையே அவர்கள் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கின்றனர்.

அதேபோல, வனத்துறையில் தங்களை ஒரு அங்கமாக்கி அங்கீகாரம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தும் பாம்பு பிடி வீரர்கள், உரியச் சலுகைகள் வழங்கி தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்கள் சேவையில் உயிரைத் துச்சமெனக் கருதிக் களமாடி வரும் பாம்பு பிடி வீரர்களுக்கு அரசு உரிய அங்கீகாரம் வழங்கி பாதுகாக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

Advertisement
Tags :
MAINபாம்பு பிடி வீரர்Snake catchers losing their lives: Will the government extend a helping hand?அரசுFEATURED
Advertisement