பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற இளைஞர் வெட்டிக்கொலை - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
நெல்லையில் நீதிமன்றம் முன்பு இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக இளைஞர் மாயாண்டி என்பவர் சென்றுள்ளார். அவரை நோட்டமிட்ட 4 பேர் கும்பல், விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், இந்த கொலை நடந்துள்ளது. இக்கொலையை கண்டித்தும், முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறியும், நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கீழநத்தம் பகுதியில் ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.