பிடிவாரண்டை முறையாக அமல்படுத்த செயல்திட்டம் : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வடிவேல் என்பவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட வடிவேல், இதுவரை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும் அந்த உத்தரவுகளை காவல்துறை முறையாக செயல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி,
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் சரக துணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்க அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கீழ்ப்பாக்கம் சரக துணை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரிச்சரண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது, நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்டை முறையாக அமல் படுத்துவதை உறுதி செய்யும் செயல் திட்டத்தை வகுக்க வேண்டுமெனவும் நீதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக துணை ஆணையர் ஹரிச்சரண் கூறியதை அடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.