For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் : மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி? சிறப்பு தொகுப்பு!

09:00 PM Nov 09, 2024 IST | Murugesan M
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம்   மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி  சிறப்பு தொகுப்பு

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் கல்விக்கடன் வழங்கும் பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் குறித்தும், அதன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

தரமான உயர்கல்வியைப் பெறுவதில் மாணவ, மாணவியர்களுக்கு பணப்பிரச்னை ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம்.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் எந்தவொரு மாணவரும், பிணையோ, உத்தரவாத கையொப்பமோ இல்லாமல் கல்விக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

என்.ஐ.ஆர்.எஃப் சமீபத்திய தரவரிசையின்படி முதல் நூறு இடங்களில் உள்ள அரசு - தனியார் உயர்கல்வி நிலையங்களிலும், 101 முதல் 200 இடங்களில் உள்ள மத்திய, மாநில அரசால் நிர்வகிக்கப்படும் தலைசிறந்த 860 உயர்கல்வி நிறுவனங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

Advertisement

ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் பெறப்படும் கல்விக்கடனில் முழு கல்விக் கட்டணம் மற்றும் படிப்பு சார்ந்த இதர செலவுகளும் அடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மற்றொரு முக்கிய முயற்சியான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்காக அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7.5 லட்ச ரூபாய் வரையிலான கடனுக்கு 75 சதவிகிதம் உத்தரவாதத்தை மத்திய அரசே அளிப்பதோடு,  8 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக்கடனுக்கு 3 சதவிகித வட்டி மானியமும் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணையதளத்தில் கல்விக்கடன், வட்டி மானியம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement