பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது : ராஜீவ் ரஞ்சன் சிங்
பிரதமர் மோடியின் நடவடிக்கையாலேயே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதிலளித்துள்ளார்.
Advertisement
மக்களவையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் , எம்.பியுமான கே.சி.வேணுகோபால் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி எம்.பி கனிமொழி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட 200 படகுகள் தேசிய உடைமையாக மாற்றப்பட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
அந்த மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மீனவர்கள் எல்லையை தாண்டி சென்றதாலேயே அவர்களின் உடைமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார். மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க மத்திய அரசால் டிரான்ஸ்பாண்டர்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா - இலங்கை இடையேயான கூட்டுக்குழு இதுவரை 6 முறை சந்தித்துள்ளதாகவும், பிரதமர் மோடியின் நடவடிக்கையாலேயே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் மீனவர்களின் நலன் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ராஜீவ் ரஞ்சன் சிங் பதிலளித்தார்.