"பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும்" - தெலுங்கானா அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
பிரியாணி மட்டுமல்ல பீரும் இருக்கு என இன்ஸ்டாகிராம் லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தெலுங்கானா மாநில அமைச்சர் சுரேகாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, தற்போது மீண்டும் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். குடும்ப உறவினர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சுரேகா, இன்று நமக்கு பண்டிகை நாள் என்பதால் அதிகமாக டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பிரியாணி வழங்கப்படும் என கூறுகிறார். அப்போது எதிரில் இருந்து பேசிய இவரது உறவுக்கார பெண் ஒருவர், மது ஆறாக ஓட வேண்டும் அல்லவா? என கேட்கிறார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சுரேகா, பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும் எனவும், அதிகம் டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பீர் வாங்கி கொடுக்கப்படும் எனவும் பதிலளித்தார். மேலும், பிரியாணியுடன் பீர் வழங்கப்படும் என உறுதி அளித்திருக்கிறேன் எனவும் கொண்டா சுரேகா கூறுகிறார்.
அப்போது இடையில் புகுந்த மற்றொரு பெண், வாரங்கல்லில் சுரேகாவின் கணவர் மதுவை ஆறுபோல் ஓட விடுவதாகவும், சுரேகாவும் இங்கு அதுபோல் செய்வார் என்றும் கூறுகிறார். தற்போது இந்த இன்ஸ்டா லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.