பிர்ஸா முன்டாவின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் - பிரதமர் மோடி
பழங்குடியின மக்களின் அடையாளமாக விளங்கும் பிர்ஸா முன்டாவின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
1875ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த பிர்ஸா முன்டா, நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடியது மட்டுமின்றி பழங்குடியின மக்கள் மதமாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
பிர்ஸா முன்டாவை பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்தநாள் தினம் "பழங்குடியின பெருமை" தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என பிரதமர் மோடி கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வரும் 15ம் தேதி பிர்ஸா முன்டாவின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில் பிர்ஸா முன்டாவின் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு விளக்கும் வகையில் பாதயாத்திரை, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்களுக்கு தலைமையேற்கும் விதமாக பீகார் மாநிலம் ஜமுய் நகரில் பிர்ஸா முன்டாவின் சிலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பேரணியிலும் பங்கேற்கவுள்ளார்.