பிறந்தது கார்த்திகை மாதம் - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
Advertisement
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்ப கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். பின்னர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலையிட்டு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலர் ஐயப்ப மலைக்கு செல்ல இருமுடி கட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள ஐயப்பன் மணிமண்டபத்தில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்கினர். செட்டிநாயக்கன்பட்டி, டவுன்லோட் புதூர், பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகைபுரிந்து சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டனர்.
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சேலத்தில் உள்ள விநாயகர், முருகன், சிவன், ஐயப்பன் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பின்னர் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டனர். மேலும், கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இதேபோல, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள், அருவியில் புனித நீராடிவிட்டு மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். மேலும், இன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடிவிட்டு செல்கின்றனர்.
புதுச்சேரி கோவிந்தன்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீசபரிவாசன் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப சுவாமி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடந்து கோயிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு தங்களது விரதத்தை தொடங்கினர்.